கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழ்நாடுடன் இணைந்த நாளான இன்று (நவ 1) நாகர்கோவிலில் உள்ள நேசமணி நினைவு மண்டபத்தில் உள்ள நேசமணி சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபடுகிறது. இதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று(அக்.31) இரவு கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.
பின்னர் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி தனியார் விடுதிக்கு வந்த அவரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எஸ்பி பத்ரிநாராயணன், ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனைத்து தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சினிமா துறையை பொறுத்த வரையில் போஸ்ட் புரொடக்ஷனுக்கு முதலமைச்சர் ஏப்ரல் மாதம் கடைசியில் அனுமதி வழங்கினார். அரங்கிற்கு உள்ளே செய்கின்ற பணிகளில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
அதுபோல் சின்னத்திரையினரின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கும் மே மாதம் முதல் அனுமதி வழங்கப்பட்டது. சினிமா படப்பிடிப்புக்கு சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று 75 பேர் கலந்துகொண்டு படப்பிடிப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்குகளை பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் மக்கள் கூடி மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டி உள்ளதால் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த மாதம் முதல் தேதி முதல் திறப்பதாக அறிவித்திருந்தன.
அதன்பேரில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலை நாங்களும் கடைப்பிடிப்போம் எனவே பண்டிகை காலத்திற்கு முன்பு திரையரங்குகளை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் வருகிற 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிறந்த நிர்வாகம் பெற்ற மாநிலமாக மத்திய அரசு தமிழ்நாட்டை அறிவித்துள்ளது.
கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது என்று பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சரை பாராட்டியுள்ளார். மாவட்ட வாரியாக களப்பணி, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நேரடியாக களப்பணிக்கு சென்றவர் நமது முதலமைச்சர்.
அதன் விளைவாக இந்தியாவிலேயே அதிக அளவில் நோய் கட்டுப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைகின்ற விழுக்காட்டில் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு சிறப்போடு இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விரைவில் முதலமைச்சர் வந்து கரோனா தடுப்பு பணிகள், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவிப்பார்.
தமிழ்நாட்டின் அரசின் சிறந்த நிர்வாகத்திறனை பாராட்டி நேற்றைய தினம் தான் மத்திய அரசு சான்றிதழ் வழங்கியது. அந்த அளவிற்கு நிர்வாகத் திறமை உள்ள முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.