கன்னியாகுமரி: தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (ஜூலை.18) ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மீனவ மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, தமிழ்நாடு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ”சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் தொடர்பாக ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்படும். குமரியில் கடலில் இருந்து மீனவர்களை மீட்க வசதியாக ஹெலிகாப்டர் தளம் விரைவில் அமைக்கப்படும்.
நிம்மதியை கெடுக்கும் ஒன்றிய அரசு
மீனவர்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் ஒன்றிய அரசு ’சாகர்மாலா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் உரிமையிலும், மீனவர்களின் உரிமையிலும் தலையிடாதவாறு திட்டங்களைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. எந்தத் திட்டம் வந்தாலும் மீனவர்களைக் காக்க எப்போதும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும்.
கல்வி, உணவு, மின்சாரம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிய அரசு கையில் வைத்து கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்க வேண்டும் என்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பேரிடர் காலங்களில் உடனடியாக கரை திரும்ப தொலை தொடர்பிற்கு அதிநவீன கருவிகள் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சோதனைக் களம் அல்ல...சமூக நீதியின் பலி பீடமும் அல்ல!