கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மினி பேருந்துகள் அனுமதியின்றியும், உரிய ஆவணங்களின்றியும், முறையாக எப்.சி. காட்டாமலும் இயக்கப்படுவதால் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர், ஒரு வழிதடத்திற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மினிபஸ்களை அனுமதியின்றி இயக்கிவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி குழித்துறை பகுதியில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவிகளின் கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த மினி பேருந்து புகுந்தது. இதில் 11 மாணவிகள் படுகாயம் அடைந்தனர், ஒரு மாணவி உயிருக்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் வேப்பமூடு சந்திப்பில் வைத்து மாவட்ட வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பூங்குழலி தலைமையில் மினி பேருந்துகளில் சோதனை நடைபெற்றது.
அதில் மினி பஸ்களுக்கான உரிய ஆவணங்கள் உள்ளனவா? சரியான தடத்தில் இயக்குகிறார்களா? முறையான நேரத்தில் எப்.சி. கட்டப்பட்டுள்ளதா? ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் முறையான ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 3 மினி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: அரசு பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!