கன்னியாகுமரி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு எதிரிலேயே உள்ள விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வகுப்புக்குச் செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். அவர் கல்லூரிக்குச் செல்லாதது குறித்து சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மதிய உணவு இடைவேளையின்போது 2 மாணவிகள் மட்டும் அவரைத் தேடி விடுதி அறைக்குச் சென்றுள்ளனர்.
அறைக்குள் சென்று பார்த்தபோது மாணவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் இருவரும், கல்லூரியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். செய்தி அறிந்து உடனடியாக வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், மாணவியை பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, ஆய்வாளர் பாலமுருகன், திருவட்டார் போலீஸ் நிலைய ஆய்வாளர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன், அவருடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் திருவட்டார் வருவாய் ஆய்வாளர் அமுதா, கல்லூரியில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் காவல் துறையினர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவியின் அறையில் சோதனை செய்தபோது ஊசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்து; மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழப்பு!
மாணவிக்குச் சொந்தமான மடிக்கணினி மற்றும் கைபேசியும் மாணவி தற்கொலைக்கு முன் எழுதிய ஆங்கிலக் கடிதம் ஒன்றும் காவல் துறையினரின் ஆய்வின்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் "தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம்” என மாணவி குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் ஒரு பெண் ஆசிரியர் உள்பட மூன்று பேராசிரியர்களின் பெயரையும் மாணவி குறிப்பிட்டு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மகள் தற்கொலை குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து மாணவியின் தந்தை போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் அந்த 3 பேராசிரியர்கள் மீதும் 306 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் காதல்; பள்ளி மாணவியிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த இளைஞர் கைது