கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சியில் மேயராக திமுகவைச் சேர்ந்த மகேஷ் செயல்பட்டு வருகிறார். நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. திமுக நிர்வாகம் நடைபெறும் இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதான சாலைகளை பழுது பார்ப்பது, புதிய சாலைகள் அமைப்பது, புதிதாக குடிநீர் குழாய்கள் பதிப்பது, குளங்கள் பாராமரிப்பது என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள், ஊழல்கள் குற்றச்சாட்டுகளை பல்வேறு கவுன்சிலர்கள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜூன் 30) மேயர் மகேஷ் தலைமையில் மாநகராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதுமே நாகர்கோவில் ஐந்தாவது வார்டு மதிமுக கவுன்சிலர் உதயகுமார் நாகர்கோவில் தனியார் பேருந்து நிலையத்தில் மிகத்தரம் குறைந்த அளவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாகர்கோவிலில் சாலை பணிகளுக்காக 70 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 50% கூட தரமான வகையில் பணிகள் நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, பொதுமக்களின் வரிப்பணம் ரூபாய் 35 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளில் மிக தரம் குறைவான குழாய்கள் பதிக்கப்பட்டு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்துள்ளது. ஆகவே ஐஐடி பொறியாளர்களை கொண்டு அனைத்து பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் நமக்கு நாமே திட்டத்தில் 50 லட்சத்திற்கு பணிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது பொதுமக்களிடம் பங்களிப்பாக அவர்களிடம் 67 லட்ச ரூபாய் நிதி வசூல் செய்ததில் மாநகராட்சி கணக்கில் 25 லட்ச ரூபாய் மட்டுமே வரவு வைக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் மதிமுக கவுன்சிலர் உதயகுமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் உதயகுமாரை திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் தரதரவென இழுத்து கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர். பின்னர், சிறிது நேரம் கடந்து மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக கவுன்சிலர் உதயகுமார், தான் வழங்கிய மோசடி குறித்த புகாருக்கு பதில் தரும் வரையிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக கூறி மாநகராட்சி கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அத்துடன் மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்களை குறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு உயர் அதிகாரிகளுக்கும் வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த வடசேரி காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்தை செய்தனர். பின்பு மாநகராட்சி பொறியாளர் 15 நாட்களில் பதில் தருவதாக வாக்குறுதி வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: “தீட்சிதர்களின் பிடியிலிருந்து சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை மீட்க வேண்டும்” - இ.கம்யூ கட்சி மாநில செயலாளர் வலியுறுத்தல்