கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா இன்று (மார்ச் 5) திரு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட எஸ்பி ஹரிஹரன் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முற்காலத்தில் பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பகாலத்தில் காளிதேவியாக வழிபட்டு வந்தனர்.
முன்னர் குமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்து இருந்ததால் பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி பகவதி அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறது. புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.
அம்மன் சிலை சுமார் 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ளது. இதுவே பகவதி அம்மன் கோயிலின் சிறப்பாக உள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இந்த புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
வழக்கமாக புற்றுக்கோயிலில் பக்தர்கள் பால் ஊற்றியும், முட்டைகளை வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை வைத்து பூஜை செய்வது இல்லை. ஆனால் இந்த புற்றுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்த கோயிலுக்கு வருவதால், இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
மாசி மாத கொடை விழா பெண்கள் இருமுடி சுமந்து, கால்நடையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவ்விழாவின்போது பக்தர்கள் கோயிலின் சுற்றுப்புறம் முழுவதும் கூடியிருந்து பொங்கல் வைப்பார்கள். அவ்வாறு அம்மனுக்கு படையல் செய்து பொங்கல் பொங்கி வழியும் போது குலவையிட்டு அம்மனுக்கு நன்றி தெரிவிப்பார்கள். மங்களங்கள் பொங்கச் செய்கின்ற தேவிக்கு பெண்கள் செய்யும் நன்றி காணிக்கையாக இதனை கருதுகின்றனர்.
இப்படி சிறப்பு வாய்ந்த கோயிலான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி மாதம் கொடைவிழா பத்து நாட்கள் வெகுசிறப்பான முறையில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா இன்று குடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது. காலையில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து திரு கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. கோயில் பூசாரிகள் திருக்கொடியை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்.
இந்த மாசி கொடை விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரு கொடியேற்ற நிகழ்சியில் கலந்து கொண்டனர். இன்று நண்பகல் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சிகளும், அதை தொடர்ந்து உச்சி கால பூஜைகளும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனியும் இரவு அத்தால பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் பத்து நாட்கள் திருவிழாவில் தினசரி பொங்கல் வழிபாடுகள், திருவிளக்கு பூஜைகள், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் பின் பத்தாவது நாளான 14 ஆம் தேதி நள்ளிரவில் ஒடுக்கு பூஜை உடன் மாசி கொடைவிழா நிறைவுபெறும்.
தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நெல்லை, தூத்துகுடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இந்த கொடைவிழாவினை முன்னிட்டு மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத சனி மகா பிரதோஷ விழா!