கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “கரோனா கொள்ளைநோய் காலத்திலும் மத்திய, மாநில அரசுகள் கொள்ளை அடிப்பதை நிறுத்தவில்லை.
காரோனாவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊர் அடங்கு காரணமாக ஏழை, எளிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் மாநில அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேலும், பாரம்பரிய மீனவமக்களின் வாழ்வாதாரத்தை அழித்து மீனவமக்களை அந்நியபடுத்தும் தேசிய மீன் கொள்கை 2020 திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது” என அவர்கள் கூறினர்.