கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
அழிக்கால் பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.5 மீட்டர் முதல் 3.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது.
18ஆம் தேதி வரை இந்த பேரலைகள் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்றுடன் வீசும்.
மேலும், 18ஆம் தேதி மேற்கு திசையில் இருந்து கேரள கடல் பகுதிகள் மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். அதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.