கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட சிங்களேயர்புரியில் குமரி சிஎஸ்ஐ பேராலயத்திற்குட்பட்ட சிஎஸ்ஐ திருச்சபை அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மொத்தம் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த திருச்சபையின் 59ஆவது சபை நாள் விழா அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஊரடங்கு காலத்தில் திருச்சபையின் 60 குடும்பங்கள் சேர்ந்து பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டையும் தங்கள் கையெழுத்தில் எழுதிய திருவிவிலியம் வெளியிடப்பட்டது. இதனை 80 நாள்களில் எழுதி முடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த திருமறையின் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இவ்விழாவிற்கு புத்தளம் சேகர சபையின் ஆயர் அருட்பணி ஜெப சுஜி தலைமை வகித்து பழைய ஏற்பாட்டு நூலை வெளியிட்டார். புதிய ஏற்பாட்டை தெங்கம்புதூர் திருச்சபையின் அருட்பணி பிரின்ஸ் வேதமாணிக்கம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு சிங்களேயர்புரி திருச்சபையின் இறை பணியாளர் ஜெஸ்லின் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள், திருச்சபை மக்கள், கிராம மக்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பேசுவதை எல்லாம் பேசிவிட்டு மீண்டும் பிணைக் கேட்கும் எஸ்.வி.சேகர் - சமூக வலைதளங்களில் கிண்டல்!