குமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையன்(72). இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் குடும்ப பிரச்னை காரணமாக சொந்த வீட்டில் வசிக்காமல் ஈத்தாமொழி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்ப வீட்டை தனக்கு எழுதி தரவேண்டும் என்று பொன்னையனின் மகன் விஜயகுமார் (39) தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி ஈத்தாமொழி வீட்டில் தங்கியிருந்த பொன்னையனிடம் குடும்பச் சொத்தை தனக்கு எழுதித் தரவேண்டும் என்று கூறி விஜயகுமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்ததோடு, அதில் பொன்னையனை தூக்கி விஜயகுமார் வீசினார். பலத்த தீக்காயம் அடைந்த பொன்னையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக நாகர்கோவில் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் கொலை வழக்கின் விசாரணை நடந்தது.
விசாரணைக்கு பிறகு கொலை செய்தல் குற்றத்திற்காக விஜயகுமாருக்கு ஆயுள்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்; அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம்; தீ விபத்து ஏற்படுத்துதல் குற்றத்திற்காக 7 ஆண்டு சிறையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.