கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளத்தை அடுத்த ஆண்டிவிளை உப்பளத்தின் கரைபகுதியில் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக தென்தாமரைகுளம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், காவல் ஆய்வாளர்கள் ஆவுடையப்பன், ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் உடலின் அருகில் மதுபாட்டிலும் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியும் கிடந்தது தெரியவந்தது. காலுக்கு மேல் உடல் முற்றிலும் கருகிய நிலையில் உள்ளதால் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இவர் தாமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபாட்டில் அருகில் கிடந்ததால் அருகிலுள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதோடு, மோப்ப நாய் ஏஞ்சலும் வரவழைக்கப்பட்டது.
இதனிடையே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.