தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. இது தொடர்பாக விசாரிக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) பாரதிதாசன் சாத்தான்குளம் சென்றார். அப்போது மாஜிஸ்திரேட்டை அச்சுறுத்துவதுபோல் சுற்றி வந்து, செல்போனில் படம் எடுத்த காவலர் மகாராஜன் என்பவர், அவதூறாக ஒருமையில் பேசியதுடன், மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, காவலர் மகாராஜன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் கூறியதாவது, "சாத்தான்குளம் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர், சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று காவலரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த நீதிபதியை சுற்றி காவலர்களை குவித்து அவரை அச்சுறுத்தினர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் புடைசூழ நீதிபதியை அச்சுறுத்தினர். மேலும் சாட்சியங்களை அழிக்கும் விதமாக காவல் துறையினர் செயல்பட்டனர். இது நீதித்துறையின் மாண்பையும் மதிப்பையும் கெடுக்கும் செயலாகும். காவல்துறையினர் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.
எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு நீதிபதியை அவமானப்படுத்தும் விதத்தில் கூடுதல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், காவலர் ஆகியோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தீவிரமாக கையிலெடுத்து நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.