கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்லின். பொக்லைன் ஓட்டுநரான இவருக்கு தங்கப் புதையல் கிடைத்ததாக ஊர் முழுவதும் பேசப்பட்டுவந்தது. இதனால் புதையலைப்பற்றி அறிய ஜெகன் என்பவர், ஜெர்லினை ஆறு பேர் கொண்ட கும்பலுடன் கடத்தினார். அவர்களிடமிருந்து தப்பித்துவந்த ஜெர்லின் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் அந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கருங்கல் பெண் காவல் ஆய்வாளர் பொன்தேவி, உதவி ஆய்வாளர் ரூபன், தலைமை காவலர் ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகிய மூவருக்கும் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்து அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக வெளியான நாளிதழில் செய்தியின் அடிப்படையில், இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
வரும் நவம்பர் 15ஆம் தேதி திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் இந்த வழக்கு தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு கருங்கல் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மூவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பான சம்மனை ஜெர்லினுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் கைவரிசை: 48 மணி நேரத்தில் திருடன் கைது