கன்னியாகுமரி: குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, நாகர்கோவில் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் (நவம்பர் 18) இரவு மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களிலும் மழை நீர் புகுந்ததால், அதனை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மலையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் மிதமாக வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறை அலுவலர்கள், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். கனமழை காரணமாக குமரி அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால், குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. இதில் 380 குளங்கள், 100 விழுக்காடு நிரம்பி உள்ளன. 266 குளங்கள் 90 விழுக்காடும், 318 குளங்கள் 80 விழுக்காடும் , 365 குளங்கள் 70 விழுக்காடும் நிரம்பி உள்ளன. 391 குளங்கள் 50 விழுக்காடும், 252 குளங்கள் 25 விழுக்காடும், மீதமுள்ள குளங்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விடும்.
இதையும் படிங்க: குமரியில் எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி