கன்னியாகுமரி மாவட்டம் அடுத்த செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம் (65). இவருக்கு வைகை அணை அடிவாரப் பகுதியில் சொந்தமாக முந்திரித் தோட்டம் உள்ளது.
தற்போது முந்திரிப் பழ சீசன் நடைபெற்றுவருவதால் தேவசகாயம் தினமும் அதிகாலையில் தனது தோட்டத்திற்கு சென்று முந்திரிப் பழங்களை சேகரிப்பது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை தேவசகாயம் தனது முந்திரிப் பழ தோட்டத்திற்குச் சென்றார்.
அப்போது அணையின் அடிவாரப் பகுதியிலிருந்து வந்த கரடி ஒன்று தேவசகாயம் மீது பாய்ந்து அவரை வெறிகொண்டு தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிருக்கு பயந்து கூச்சலிட்டார்.
அப்போது அவரது தோப்பில் படுத்திருந்த சில நாய்கள் சேர்ந்து கரடி மீது பாய்ந்து அதனை விரட்டியது. இதை பயன்படுத்தி தேவசகாயம் அங்கிருந்து தப்பித்து ஓடினார். பின்னர் தேவசகாயம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.