குமரி - கேரள எல்லைப் பகுதியான கொல்லங்கோடு பகுதியில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க பத்திரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பரண் ஏற்று விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா, தாரிகா அசுரனை அழிக்க நடந்த போரில் காளிதேவி வெற்றி பெற்றதை நினைவு கொள்ளும் வகையில் நடக்கும் விழாவாகும்.
இந்நிலையில் இன்று அதிகாலை காளிதேவி அசுரனை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வயல்வெளியில் உயரமாக அமைக்கப்பட்ட பரணில் ஏறி காளியும் அசுரனும் போர் புரிந்தனர். அதை தொடர்ந்து தேவியும் அசுரனும் நிலத்தில் இறங்கி போர் செய்தனர். பயங்கரமான போரின் முடிவில் பத்திரகாளி அசுரனை அழித்தார். இதில், காளிதேவி போர் புரியும் காட்சிகளை பக்தர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.