கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, வைரஸ் தொற்று இருப்பது நேற்று இரவு (ஜூலை.26) உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜேஷ்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருபவர்களால் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை, மையங்களில் உணவு சரியாக வழங்கப்படவில்லை என, ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதுவரை மாவட்டம் முழுவதிலுமிருந்து 74 ஆயிரத்து 983 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 4 ஆயிரத்து 139 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் ஆயிரத்து 650 பேர் தொடர் சிகிச்சைகளில் உள்ளனர். இதுவரை 35 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனிதர்கள் மீதான முதற்கட்ட கோவாக்சின் பரிசோதனை நிறைவு!