மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று (டிசம்பர் 16) கன்னியாகுமரி மாவட்டம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் திருநெல்வேலியிலிருந்து இருந்து புறப்பட்டு காவல்கிணறு வழியாக அஞ்சுகிராமம், மயிலாடி சுசீந்திரம் வழியாக நாகர்கோவில் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அஞ்சுகிராமம், மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் அவரை வரவேற்பதற்காக காத்திருந்தனர். காலை 8 மணி முதலே இவர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர். ஆனால் மதியம் 2 மணிவரை அஞ்சுகிராமம், மயிலாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கமல் ஹாசன் வரவில்லை.
அவர் காவல்கிணறு பகுதியில் இருந்து கன்னியாகுமரி பைபாஸ் வழியாக சென்று பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் சென்றுவிட்டார் என்பது பின்னர் தெரிந்தது. இதனால் காலை முதலே வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், காலை முதலே கமல் ஹாசனை பார்ப்பதற்காக காத்திருந்தோம். ஆனால் அவர் இங்கு வருவதாக கூறிவிட்டு வரவில்லை. இதற்கு மாவட்ட செயலாளர்தான் காரணம். அவர்தான் பாதையை மாற்றி வேறு பாதையில் கமல் ஹாசனை அழைத்து சென்றுவிட்டார் என்றார்.