கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கேரளா, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சூரிய எழுதலைக் காண ஏராளமானோர் குவிந்தனர். கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் இங்கு கூட்டம் அலைமோதுகிறது.
கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டில் மட்டுமில்லாமல், வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இங்குள்ள பகவதி அம்மன் கோயில், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, ஞாயிறு எழுதல், சூரியன் மறைதல், முக்கடல் சங்கமம் போன்றவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துவருகிறது.
கடலில் படகு மூலம் பயணம் செய்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை அடைவது ஒரு புதுவித அனுபவித்தை சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கிறது. இந்நிலையில், முக்கடல் சங்கமத்தில் இன்று காலை ஞாயிறு எழுதலைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர்.
அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் உள்ள நேரத்தில் மாவட்ட காவல் துறை பாதுகாப்பு பணிக்கு அதிகமான காவல் துறையினரை நியமிக்க வேண்டும் எனவும், பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் வசதிகளும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.