கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வாகனங்களில் வருபவர்கள், காய்கறி உணவுப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இதனிடையே, நேற்று ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து மீன் ஏற்றி வந்த டெம்போவிலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த காவல் துறையினர் டெம்போவைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அழுகிய நிலையில் ஒரு டன் மீன்கள் இருந்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை, மீன்வளத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடிக்கு வந்த அலுவலர்கள் அழுகிப்போன ஒரு டன் மீன்களைப் பறிமுதல் செய்ததோடு அதனைக் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் உணவுப் பொருள்களான மீன் உட்பட அனைத்தையும் கவனமாகச் சோதனை செய்து வாங்குமாறு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஏழைகளுக்கு உணவளிக்க ரூ.20 லட்சம் திரட்டிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!