கன்னியாகுமரி துறைமுக எதிர்ப்பு போராட்டக் குழுவினர், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பில் போராட்டக்குழு ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலருமான தேவசகாயம் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "கடந்த மாதம் 20ஆம் தேதி தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கன்னியாகுமரியில் அமைக்கப்பட உள்ள துறைமுகத் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு தரப்பிலிருந்து ஒரு கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு வந்ததாகவும், அந்தக் கடிதத்தில் தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி துறைமுக கழகத் தலைவர் ஆகியோரை நான் தொடர்பு கொண்டு விசாரித்தேன். இக்கடிதத்தில் சந்தேகம் எழுகிறது. இக்கடிதம் போலியானதா அல்லது உண்மையானதா என மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் காரணமாக 55 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!