கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைசாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவில் பணியில் இருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலைசெய்ய பயன்படுத்திய துப்பாக்கியை நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் பேரூந்து நிலையம் அருகே உள்ள சாக்கடைக்குள் இருந்து காவல்துறையினர் கைப்பற்றினர்.
இன்று திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள திறந்த புல்வெளி பகுதியில் கத்தியை எறிந்த இடத்தையும் அவர்கள் காட்டியதைத் தொடர்ந்து ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு காவல்துறையினர் ரத்தக்கறை படிந்த கத்தியை கைப்பற்றினர். மேலும் ஒரு கைப்பையில் சில ஆவணங்களும் கிடைத்தன.
அதில் “இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வரை ஓயமாட்டோம், காஜா பாய் என்ற காஜாமொய்தீன் தான் எங்கள் தலைவர்” என எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள காஜாமொய்தீனை இவர்கள் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால் அடுத்த கட்ட விசாரணையில் இருவருடன் தொடர்பில் உள்ள மேலும் பலர் கைது செய்யப்படவும், ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!