கடல் வழியாக நுழைந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியதையடுத்து, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழம காவல் துறையினர் கடல்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் “சாகர் கவாச்” என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த ஒத்திகையானது, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர் நவீன் தலைமையில் நடைபெறுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆறு செக் போஸ்டுகளையும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
மேலும், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினருக்குச் சொந்தமான அதிவிரைவு படகுகளில் கூடன்குளம் அணுமின் நிலையம், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 42 கடற்கரை கிராமங்களை கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அப்போது கடல் பகுதிகளில் சந்தேகப்படும்படியான படகுகள் தென்பட்டால் அவற்றை வழிமறித்து விசாரணை செய்து அனுப்பி வைக்கின்றனர். அதிநவீன நுண்ணோக்கிகள் மூலம் தொலைதூரத்தையும் கண்காணித்து வருகின்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது குமரி கடற்பகுதிகள் முழுவதிலும் நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: விமான நிலையத்தில் ஒத்திகை