கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோயில் கொண்டுள்ள நாகராஜா சுவாமி கோயில் பல்வேறு சிறப்புமிக்க பழைமை வாய்ந்த வரலாற்று தலமாகும்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப் பெருந்திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தைப் பெருந்திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
எட்டு நாட்கள் நடைபெற்ற விழாவில், மூலவர் நாகராஜா சுவாமிக்கு சிறப்பு அபிசேக பூஜை, சிறப்பு வழிபாடுகள், மண்டகப்படி புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.
இந்நிலையில் நாகராஜா கோயிலில் 9ஆம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது, இதனை முன்னிட்டு கோயிலிலிருந்து சுவாமி விக்ரகங்கள் பல்லக்கில் கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்திற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
நாகராஜா கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
நாகராஜா சுவாமி கோயிலில் இன்று நடைபெறும் ஆராட்டு நிகழ்சியுடன் பத்து நாட்கள் திருவிழவும் நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்ப உற்சவம்