குமரி மாவட்டம், இரணியலில் பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் பெண், தனது முடிவுக்கு தனது தாயும், தந்தையும் தான் காரணம் என காதலனிடம் பேசும் ஒலிப்பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் அனுஷியாவுக்கு வயது 17. 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் வீட்டிலிருந்த இவர், ஒரு வாரமாக அழகு நிலையத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். நஞ்சருந்திய அனுஷ்யா ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவர் மரணத்தை அடுத்து, தந்தை ரத்தினசாமி, தாய் சார்லெட்பாய் ஆகியோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. அதில் தங்கள் இளைய மகளான அனுஷ்யா வீட்டிலிருந்து 2000 ரூபாய் பணத்தை திருடியதாகவும், அதற்காக மகளை திட்டியதாகவும், உடனே எலி மருந்தை எடுத்து குடித்து மகள் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒடிசாவில் கூட்டு பாலியல் வன்முறை: முன்னாள் காவலர் செய்த கொடூரம்!
இது ஒருபுறம் இருக்க, சமூக வலைதளங்களில் அனுஷ்யாவின் பள்ளி நண்பர்களும், சுற்றுப்புற தோழமைகளும், இவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை காவல் துறையினர் முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் செய்திகள் உலாவத் தொடங்கியது.
இவரின் காதலன் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், அனுஷ்யா தன் காதலனுடன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தது. அது மேலும் இவ்வழக்கை வேறு திசைக்கு அழைத்து செல்லும்படி அமைந்திருந்தது.
சாக்கடையில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை!
அந்த ஒலிப்பதிவில், “என்னை தகப்பனும், தாயும் பல ஆண்டுகாலமாக கொடுமை படுத்தி வருகின்றனர். நான் சாகப் போகிறேன். நான் இல்லை என்றால் நீ என்ன செய்வாய்? நான் இன்னும் சாப்பிடவில்லை” என்று மனவேதனையில் பேசியிருக்கிறார். மறுபுறத்தில் இருந்து காதலனோ “உணவை பாத்து சாப்பிடு. ஏதாவது கலந்து கொடுத்து விடுவார்கள்; கவனமாக இரு” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்த ஒலிப்பதிவு தற்போது சுற்றுவட்டாரத்தில் அதிகம் பரவி பேசுபொருளாகியிருக்கிறது. பெற்ற தாய், தந்தையே மகளை இப்படி கொடுமைப் படுத்த எப்படி மனசு வருகிறது என்று சுற்றுவட்டார மக்கள் புலம்பி வருகின்றனர்.