முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரச்சாலை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மதுரை - கன்னியாகுமரி வழித்தடத்தில், குமரி மாவட்டம் நரிக்குளம் அருகே சாலையில் பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலத்தை கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்குப் பின் இந்தப் பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு, பாலம் பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.
இப்பாலம் உள்ள சாலையின் இருபுறத்திலும் வரிசையாக மின் விளக்குகள் இருந்தாலும், அவை எரியாமல்தான் உள்ளன எனக் கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்வோர் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்தப் பாலம் சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரிக்கு மிக அருகிலிருப்பதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளும் வாகன ஓட்டிகளும் இவ்வழியாக அதிகமாக பயன்படுத்திவருகின்றனர். இந்த நாற்கரச்சாலையில் வளைவான பகுதிகள் இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் வெளிச்சம் தெரியாமல் நடுவில் உள்ள சாலைத் தடுப்புகளில் இடித்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சாலை தெரியாமல் வாகனங்கள் குளத்திற்குள் பாய்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் இந்தப் பாலத்தின் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், இரவில் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுகின்றனர். இந்தப் பகுதியில் பார் வசதியில்லாத டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால் குடிமகன்கள் பாலத்தைத் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மது அருந்துபவர்களால் இருசக்கர வாகனத்தில் குடும்பமாகச் செல்ல முடியாத நிலையும், பெண்கள் தனியாகச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல முறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு இந்தச் சாலையின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:#ViralVideo: சாலைக்குழிகளுக்கு கால்களால் கலவைப் பூச்சு - அரசு ஊழியர்களின் அலட்சியம்