தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் என்பவரும், அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை மகன் இருவரையும் கொன்ற காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, காவல் நிலையங்களில் காவல் துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தும் வகையில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொலை வழக்குகளில் தொடர்பு உடையவர்கள், பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை செய்பவர்களை மட்டும் கைது செய்தால் போதும். இன்னும் இரண்டு வாரத்திற்கு காவல் துறையினர் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்திய தண்டனை சட்டம் 353 கைது செய்யப்படும் நபராக இருந்தால் அவரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லக்கூடாது. அருகில் உள்ள வேறு காவல் நிலையத்தில் கொண்டுதான் விசாரிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசாதீர்கள். அவர்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். காவல் துறையினர் மிகவும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம். ஆனால் சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் காவல் துறையினரைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறி இருக்கும். எனவே காவலர்கள் யாரையும் தரக்குறைவாகப் பேச வேண்டாம். அன்பாக பேசி பிரச்னையை விளக்க வேண்டும். காவல் துறையினருக்கு ஆன்லைன் பயிற்சி முகாம் நடக்க உள்ளதால், அதில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...அடிப்படை பணிகளை மேற்கொள்ள நிலுவைத் தொகை கேட்டு மனு