கன்னியாகுமரி: திருவட்டாரைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் 12 பேர், திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு, தங்களது சொகுசு காரில் இன்று (மே 12) காலை சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இந்த கார் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் லாயம் சந்திப்பில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரைச் சேர்ந்த நடனக்கலைஞர் சதீஷ் (37), அஜித் (25), அருமனையைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் (24) மற்றும் சிஞ்சு (17) ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர்.
அதேநேரம், 3 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து காயம் அடைந்த அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வரும் நடனக் கலைஞர்களை மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் மற்றும் மேயர் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
பின்னர் மருத்துவர்களிடம் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில், “காரை ஓட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முக்கியமான ஐந்து பகுதிகள், விபத்து பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, விபத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்தப் பகுதியையும் 6வதாக இணைத்து விபத்தை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சாலைகளிலும் இருசக்கர வாகனம் மற்றும் பிற வாகனங்களில் செல்வோர் அதிவேகமாகச் சென்று வருவதை, போக்குவரத்து காவல் துறையினர் கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Bus Accident: சீர்காழி அருகே அரசு சொகுசு பேருந்து விபத்து: நடத்துனர் உட்பட 4 பேர் உயிரிழப்பு!