தமிழ்நாட்டில் மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கு கடலில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திர ஆகிய மாநிலங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடித் தடை காலம் மே, ஜூன் மாதங்களில் அமலில் இருக்கும். அதேபோல குமரி மாவட்டம் நீண்ட கரை முதல் கேரள மாநிலம் கொல்லம் உட்பட குஜராத் வரையிலான மேற்கு கடற்கரைப் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மீன்பிடித் தடை காலம் அமலில் இருக்கும்.
அதன்படி குமரி மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இரண்டு மாத தடை காலத்தில் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நாளையுடன் மீன்பிடித் தடை காலம் நிறைவுபெறுவதால் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்களை தயார் செய்துவருகின்றனர். ஆழ்கடலில் 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடிப்பதால் அதற்கு தேவையான டீசல், குடிநீர், உணவுப் பொருட்கள் போன்றவற்றை மீனவர்கள் தீவிரமாக சேகரித்துவருகின்றனர்.