குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (40). அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு இந்திரா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக விடுதிகள் இயங்கவில்லை, இதனால் வேலையில்லாமல் சுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் மிகவும் வறுமையில் இருந்துள்ளார்.
தொடர்ந்து சுப்பிரமணி பல இடங்களில் வேலை தேடியும் எதுவும் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக மிகவும் விரக்தியுடன் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடம் வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வேலையில்லாமல் வறுமையின் காரணமாக சுப்பிரமணியன் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வேலை இல்லாமல் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் மகளைக் கொலை செய்த தந்தை!