கன்னியாகுமரியில் உள்ள பிரபல ஹோட்டலில் உள்ள பார் ஒன்றில் நேற்று இரவு(செப்.23) மூன்று இளைஞர்கள் புகுந்து அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி, ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பார் மேலாளர் இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இத்தகவலையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில் அந்த மூன்று பேரும் மதுபோதையில் இருந்ததும், அவர்கள் சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (20), கிருஷ்ணன் (21), ஹாரிஸ் (18) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் பல்வேறு வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் என்பதும், ஆனால் தற்போது கன்னியாகுமரியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் மீதும் சென்னையிலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய-வங்கதேச எல்லையில் போதைப்பொருள்களுடன் நின்று கொண்டிருந்த இருவர் கைது!