குமரி மாவட்டம் மயிலாடி அடுத்த வடக்கு மார்த்தாண்டபுரம் எஸ்.எம். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் ஹரிஹரன் (22), 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் ஒரு ஹோட்டலிலும், பின்னர் நகைக் கடைகளிலும் வேலை பார்த்துள்ளார். இவர், தற்சமயம் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்காக தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் இவரது வீட்டின் அருகில் நாய் குரைத்துகொண்டிருந்துள்ளது. என்னெவென்று பார்ப்பதற்காக வெளியே சென்றவர் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் இவரது உறவினர்கள் வீட்டின் அருகில் தேடிப் பார்த்துள்ளனர் ஆனால் அவரைக் காணவில்லை.
இன்று காலை வீட்டு அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் ஹரிஹரனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலைய காவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் ஹரிஹரனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் பக்கத்து வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வாலிபர் பக்கத்து வீட்டு மாடிக்கு செல்வதற்கு காரணம் என்ன, அல்லது யாரும் அவரை பலமாகத் தாக்கிக் கொலை செய்தனரா உள்ளிட்ட கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. அதிரடி கைது!