கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே தெற்கு குண்டல் பகுதியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, இரவு பூஜைகள் முடித்து கோயில் கதவை பூட்டிவிட்டு கோவில் நிர்வாகி ரகுபாலன் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை பூஜை செய்வதற்கு முன், கோயிலை சுத்தம் செய்ய ரகுபாலனின் மனைவி ராமலட்சுமி கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கதவுகள் மற்றும் கருவறை கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் கருவறைக்குள் சென்று பார்த்தபோது, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த வைர மூக்குத்தி, தங்க கம்மல், நான்கு வளையல்கள், ஒரு நெக்லஸ், ஏழு கம்மல்கள் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகள் மற்றும் திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதேபோல், கோயிலுக்கு அருகில் உள்ள முத்துசாமி என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையின் பின்பக்க கதவை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் கோயில் மற்றும் பலசரக்கு கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.