சமூக வலைதளங்கள் தற்போது மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ட்விட்டர், முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை வெளியிட்டால் போதும், அதில் இருக்கும் விசயம் சரியோ தவறோ மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப்பெறுகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் வாட்ஸ் அப் குழுக்களில் சமீபத்தில் ஒரு வீடியோ காட்டுத்தீ போல் பரவி வருகிறது. காவல்துறையினருடன் செல்ல மறுக்கும் இரண்டு நபர்களை ஐந்து காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கி வேனில் ஏற்றுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
36 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ தற்போது குமரி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அலுவலரிடம் கேட்டபோது, "அந்த வீடியோவில் இருப்பவர்கள் கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சேர்ந்த சகாய வால்ட்டர், ராஜசங்கீத தெருவைச் சேர்ந்த ரவீந்திரன். சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் அருகே பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த ஏட்டு சங்கரலிங்கத்தை தாக்கி அவரது தொலைபேசியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இது தொடர்பாக அந்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் துரத்தி பிடித்தனர்.அப்போது இருவரும் போதையில் இருந்ததால் வேனில் ஏற மறுத்தனர். இதனால் அவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டியதாகிவிட்டது.
இதனை அந்த பகுதியிலிருந்த கட்டடத்தில் வேலை செய்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் தவறாக பரப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என அவர் கூறினார்.
இதையும் படிங்க: ரூ. 10 கோடி செலவிட்டு உருவாக்கிய கதாபாத்திரத்தைத் தவறுதலாக ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற நண்பன்!