கன்னியாகுமரி:தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். இங்கு ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை சுமார் 48 மீனவ கிராமங்கள் உள்ளன. சின்னமுட்டம், குளச்சல் , முட்டம் ,தேங்காய்பட்டனம் என 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு விசை படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 350 விசைப் படகுகள் தினமும் அதிகாலை மீன்பிடிக்க சென்று விட்டு இரவு துறைமுகம் வருவது வழக்கம். அப்படி மீன் பிடித்து திரும்பும் வேளையில் அவர்கள் பிடித்து வரும் மீன்களை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர். குறிப்பாக உயர் தர மீன்கள் கிடைக்கும் என்பதால் மீன் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் , கேரளா வியாபாரிகள் என நாள்தோறும் ஏராளமானோர் சின்னமுட்டம் வருகை தந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.
ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கணவாய் மீன்கள் அதிகமாக கிடைக்கும் காலமாகும். இந்நிலையில் கனமழை மற்றும் வானிலை காரணமாக கேரளா மற்றும் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஓரிரு நாட்கள் இருந்து வந்தனர்.
இருப்பினும் மீன்களின் சீசனை கருத்தில் கொண்டு சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று(ஆகஸ்ட் 10) விசைபடகில் மீனவர்கள் தடையை மீறி மீன் பிடிக்க சென்றனர். அவ்வாறு சென்ற மீனவர்களுக்கு ஏராளமான கணவாய் மீன்கள் கிடைத்துள்ளது . மீனவர்கள் பிடித்த மீன்களை வாங்கி செல்ல உள்ளூர் மற்றும் கேரளா உட்பட வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் துறைமுகத்தில் குவிந்தனர். ஒரு கிலோ கணவாய் மீன் சுமார் 400 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தடையை மீறி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதால் அதிக மீன்கள் கிடைத்துள்ளது. இதனால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேளையில் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தடையை மீறி மீன்பிடிக்க சென்றதால் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட போதும் ஆன்லைன் மூலம் விற்கப்படும் லாட்டரி ...