கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவருக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்வு அறையில் வைக்கப்பட்டது.
கடந்த மூன்று நாள்களாக அவரைப் பற்றிய விவரங்கள் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதியவருக்கு கரோனா பாதித்ததால் அவரது குடும்பத்தினருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டது.
அதில் அவரது மகனுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலும் அதே உடற்கூராய்வு அறையில் வைக்கப்பட்டது. இந்தத் தகவல் குறித்து மருத்துவர்கள் அவர்களது குடும்பத்திற்கு தெரியப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கரோனாவால் உயிரிழந்த தந்தை, மகன் இருவரது உடலையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி நாகர்கோவிலில் உள்ள புளியடி மின் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் குறைந்துள்ள கரோனா பரவல் விகிதம்!