குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்துவருகிறது. தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
குறிப்பாக, குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் தொற்று வேகமாகப் பரவுகிறது. இதேபோல மாவட்டத்தில் ஏற்கனவே திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் வடசேரி, கோட்டாறு, தக்கலை உள்ளிட்ட காவல் நிலையங்கள் இதுவரை பலமுறை சீல் வைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளரின் ஓட்டுநருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஓட்டுநர் நேற்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனைக் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துவரும்போது பணியில் இருந்துள்ளார். இந்தக் காவல் நிலையத்தில் நேற்று ஏராளமான காவல் துறையினரும், பத்திரிகையாளர்களும் குவிந்திருந்தனர்.
இதற்கிடையில் பொட்டல் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் காரணமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.
அதேபோல் வடசேரி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளத்தில் சேர்க்கப்பட்டு இன்று உயிரிழந்தார். இதனால் குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். குமரி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.