கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை திருப்பதிசாரத்தில் உள்ள திருவாழ்மார்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றதாக உள்ளது.
கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாகத் திருவிழாவானது நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஆஸ்டினிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களை இன்று (ஏப். 16) நேரில் சந்தித்தார். அப்போது திருவாழ்மார்பன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து மனு அளித்தார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் திருவிழாவை பொதுமக்கள் முன்னிலையில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சை பெருவுடையார் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்குத் தடை