குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள், லேப்டாப் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக சைபர் செல் என்னும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான இந்த பிரிவு காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை சேகரித்து அதனடிப்படையில் விசாரித்து வந்தனர்.
அதில் முதல் கட்டமாக 2018 முதல் 2019ஆம் ஆண்டு வரை பதியப்பட்ட வழக்குகளில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.