நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை விளங்குகிறது. இந்த அணையிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு போதிய பருவமழை இல்லாததால் முக்கடல் அணை வறண்டுள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை புதன்கிழமை நிலவரப்படி மைனஸ் 17.05 அடிக்குச் சென்றுவிட்டது. இதனால், நாகர்கோவில் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பல இடங்களில் குடிநீருக்காகப் பொதுமக்கள், பெண்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் முக்கடல் அணைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், , நாகர்கோவில் நகர மக்களுக்குத் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.