கன்னியாகுமரி: திருவட்டார் அடுத்து ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி, கமுகன்விளை. இது திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் வெற்றிபெற்ற தொகுதியான பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட பகுதி ஆகும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சிக்குட்பட்ட சாலைகள் சிமென்ட் கலவை கொண்டு அமைக்கப்பட்டது.
இந்த சாலை வழியாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குப் பொதுமக்கள் சென்றுவந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள சேதத்தால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வாகனத்தில் செல்லமுடியாத நிலையினால், இப்பகுதியிலுள்ள நோயாளிகளை ஒரு கிலோமீட்டர் சுமந்து சென்று, மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட சாலையை செப்பனிடக்கோரி, பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கைகள் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை எனக்குற்றம்சாட்டிய இப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு துண்டிக்கப்பட்ட கமுகன்விளை சாலையைப் பக்கச்சுவர் எழுப்பி, தரமான சாலை அமைத்துத் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் கோரிக்கைகளை அரசும் கண்டுகொள்ளவில்லை. அமைச்சர் மனோ தங்கராஜின் சொந்தத்தொகுதி என்று பெருமைப்படவேண்டிய நிலையில், அடிப்படை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டும்... அமெரிக்காவில் கோரிக்கை வைத்த சபாநாயகர் அப்பாவு