பார்க்கும் இடமெல்லாம் பசுமை, நெல் விளையும் விவசாய பூமியாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல், வாழை, தென்னை, ரப்பர் உள்ளிட்ட பல பயிர்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் பாசனத்திற்காக அணைகள் திறக்கப்படுவது வழக்கம். கால்வாய்கள் தூர் வாரப்பட்டு ஷட்டர்கள் பழுது பார்க்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அணையில் தண்ணீர் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் கால்வாய்கள் தூர் வாராததால் கடைவரம்பு பகுதிக்கு வரவேண்டிய தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், விவசாய விளைநிலங்களில் நெல் பயிரிட முடியாமல் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பல இடங்களில் உப்பு நீராக மாறிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் வேதநகர் பகுதியில் கோட்டார் கால்வாய் தூர் வாராமல் புதர் மண்டி கிடப்பதை கண்டறிந்தார்.
இதனையடுத்து, அரசு இதுவரை கால்வாயை தூர் வார நடவடிக்கை மேற்கொள்ளாததால், தனது சொந்த செலவில் தூர் வார முடிவு செய்தார். அதனடிப்படையில் கால்வாய் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கடைவரம்பிற்கு தண்ணீர் கொண்டு செல்வதன் மூலம் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலாக பாசன வசதி பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எம்எல்ஏவின் இந்த முயற்சிக்கு விவசாயிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.