கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திக தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ‘ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவ - மாணவிகள் மருத்துவர் ஆகக்கூடாது என்ற சூழ்ச்சியோடு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் திட்டமாகும். தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் என்ன நடக்கிறது? 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்துவர். இதன்மூலம் நம் குழந்தைகளின் கண்கள் குத்தப்படுகிறது’ என்றார் வீரமணி.
மேலும், ‘சிஏஏ திருத்தச் சட்டம் கொண்டுவந்தது பொதுமக்கள் விலைவாசி உயர்வை மறப்பதற்குத்தான். வெங்காயத்தை உரித்தால் பெண்களுக்கு கண்ணீர் வரும். ஆனால் இப்போது வெங்காயத்தை நினைத்தாலே பெண்களுக்கு கண்ணீர் வருகிறது’ என்றும் வீரமணி பேசினார்.
இதற்கிடையே சாமிதோப்பு தலைமைக்குரு பாலபிரஜாபதி அடிகளாரின் 72ஆவது பிறந்தநாள் விழாவில் வீரமணி கலந்துகொள்ள இருந்த நிலையில், அதற்கு திடீரென இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராவாரா சீதாராம் யெச்சூரி?