கன்னியாகுமரி: நாகர்கோவில் பாவா காசிம் பள்ளிவாசலில் மத நல்லிணக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய மும்மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "மோடி அரசு பதவியேற்று மே 30 ஆம் தேதியோடு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டை தொடங்கியுள்ளனர். இந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் மோடியின் நண்பரான கார்ப்பரேட் நிறுவனத்தார் மட்டுமே முழு பலனை பெற்றுள்ளார்கள். அவர்களுடைய செல்வ மதிப்பீடுகள் பல மடங்கு பெருகி உள்ளது. 45 ஆண்டுகளாக இல்லாத அளவில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது.
உலக வரலாற்றில் பல்வேறு குறியீட்டில் இந்தியாவின் நிலை பின்தங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்து செய்துள்ளது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் மோடி அரசு கவலைப்படவில்லை. மதத்தின் பெயரால் மக்களை பிரித்து நிர்வாகம் நடத்த முயற்சி செய்கிறார்கள். மாநில அரசின் உரிமைகளை படிப்படியாக பறித்து வருகிறார்கள். பத்திரிகை சுதந்திரங்கள் பறிக்கப்படுகின்றன.
அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் அண்ணாமலை பத்திரிகை நிருபர்கள் கேள்வி கேட்டால் திட்டுவதும் கொச்சைப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய பாஜக அரசின் முன்னாள் அமைச்சர் ஒருவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவின் மூத்த தலைவர்களே அண்ணாமலையை மதிப்பதில்லை. இதனால் மனப்பிரமையை பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்" என்றார்.
இதையும் படிங்க: இனி 9,10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி பாடம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை தகவல்!