சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் பகுதியில் சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது.
இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கவும் இன்றைய அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்தை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளிடையே கொண்டு சேர்க்கும் வகையில் இஸ்ரோ சார்பில் அமையவுள்ள இந்த தொழில்நுட்ப பூங்காவில் அதிநவீன தொலைநோக்கு கருவிகள், இந்தியா முதலில் விண்ணில் செலுத்திய செயற்கை கோள், ராக்கெட் முதல் தற்போது உள்ள செயற்கைகோள் அனைத்தின் மாதிரிகளும் இங்கு இடம்பெறுகின்றன.
முக்கியமாக ஸ்ரீஹரிகோட்டா போன்ற ஏவுதளங்களில் செயற்கைகோள் விண்ணில் செலுத்துவதை இந்த மையத்தில் இருந்தபடியே காணும் வகையில் ரியாலிட்டி திரையும் (Reality Screen) இங்கு அமைக்கப்படவுள்ளது. தற்போது கொல்கத்தாவில்தான் அதிநவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற மையம் அமைந்துள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் அமையவுள்ள இந்த மையம் அதைவிட சர்வதேச அளவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் முதல் சந்திர கிரகணம் வரை விண்வெளியில் நடக்கும் அனைத்து அற்புதங்களையும், அதிசய நிகழ்வுகளையும் இந்த மையத்திலிருந்து காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அடிக்கல் நாட்டும் விழா இன்னும் ஒன்றரை மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசின் முக்கிய விருந்தினர்கள், இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: அதிகரித்துவரும் இணைய குற்றங்களின் அச்சுறுத்தல் - அரசு எவ்வாறு கையாளப்போகிறது?