கன்னியாகுமரி: தமிழ்நாடு முழுவதும் ஒருவித வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவ துறை பரிசோதனைகள் மூலம் இன்ஃபுளுவென்சா வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த நோயின் பரவல் தன்மை குறித்து நன்கு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,“மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி,பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நோய் பரவல் அதிகமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை”, என உறுதி அளித்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பின் 104 புகார் எண்ணை அழைக்கலாம்