சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் கன்னியாகுமரியில் சுற்றுலாவுக்கு வருபவர்களை வழிமறித்து மதம்சார்ந்த துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தும் மாற்று மதத்தினர் இழிவாகப் பேசி மதமாற்றம் செயலில் ஈடுபட்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, இந்து அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து இந்து முன்னணி நிர்வாகி முத்துசாமி கூறுகையில்,
கன்னியாகுமரி என்பது ஒரு சர்வதேச சுற்றுலா தலம் மட்டுமல்ல பகவதி அம்மன் கன்னியாகத் தவமிருக்கும் இடமாகும். இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஒரு சிலர் தொடர்ந்து மதமாற்றச் செயலில் ஈடுபட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். இதுகுறித்துத் தொடர்ந்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அளவில் இது குறித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.