கன்னியாகுமரி: கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது 350 ரூபாயாக இருந்த பிச்சி பூ, இன்று 1250 ரூபாயாகவும், மல்லிகை பூ 550 என்ற அளவில் இருந்து, 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை, காலம் காலமாக அம்மாநில மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய பகுதியாக, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்தும், ஊஞ்சல் ஆடியும் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் வைத்து மிக சிறப்பான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரள மக்களின் வசந்த விழா என்று அழைக்கப்படும் ஒணம் பண்டிகை கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. 10 நாள் விழாவில் இன்று நான்காவது நாள் ஓணத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில், பூக்களின் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது. பண்டிகையையொட்டி கடந்த 20 ஆம் தேதியில் இருந்து, கேரளா மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு வருவதால், பூக்களை வாங்க கேரள வியாபாரிகளும், பொதுமக்களும் தோவாளை பூச்சந்தையில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
கேரளாவில் இருந்து வியாபாரிகள் அதிகமாக வருவதால் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வரலெட்சுமி நோன்பு நிகழ்ச்சி நாளை கொண்டாட இருப்பதால், பூக்களின் தேவை மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் தோவாளை மலர்ச்சந்தையில் இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சி பூ இன்று, 1250 ரூபாயாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, 550 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 1000 ரூபாயாக உயர்ந்து உள்ளது. ஒற்றை தாமரைப் பூ, 5 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதே போன்று கனகாம்பரம் 600 ரூபாயாகவும், செவ்வந்திப்பூ 350 ரூபாயாகவும், ரோஜாப்பூ 300 ரூபாயாகவும் விலை உயர்ந்து உள்ளது. பூக்களின் வரத்து குறைவாக இருப்பதனால், வரும் நாட்களில் பூக்களின் விலை பல மடங்கு உயரக்கூடும் என தோவாளை பூ வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : (24-08-2023)
- பிச்சி. :1250
- மல்லிகை. :1000
- கிரேந்தி. : 50
- செவ்வந்தி. : 350
- அரளி. : 200
- சம்பங்கி : 100
- வாடாமல்லி. : 150
- கனகாம்பரம். : 600
- ரோஜா. : 300
- மரிக்கொழுந்து : 120
- கோழிக்கொண்டை: 80
- தாமரை(1) : 20
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை எதிரொலி : எக்குத்தப்பாக எகிறும் பூக்களின் விலை!