கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணி (63), அதே பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களுடன் ரெமிஜியூஸ் என்பவருக்கு சொந்தமான படகில் கோவளத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். படகானது கரையிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்துள்ளது.
அப்போது, ராட்சத அலை அடித்துள்ளது. இதில் நிலை தடுமாறிய அந்தோணி படகிலிருந்து தூக்கி வீசப்பட்டு கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக கடலுக்குள் குதித்து அவரை தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து உடனடியாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இத்தகவலின்பேரில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு அதிநவீன ரோந்து படகில் விரைந்து வந்து அந்தோணியை அவர் தவறி விழுந்த பகுதியில் தேடிவருகின்றனர். இந்தத் தேடுதல் பணியில் காவல் துறையினருடன் மீனவர்களும் இணைந்து அந்தோணியை தேடிவருகின்றனர்.
தொடர்ந்து கோவளம் கடற்கரையில் இதுபோன்ற மீனவர்கள் உயிரிழப்பு சம்பவம் அதிகரித்துவருகிறது. அதனால் கோவளம் கடற்கரையில் தூண்டில் வளைவு சீரமைத்து தூண்டில் வளைவை நீட்டிக்க பொதுமக்களும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்