கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, " சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரில் வாக்குகள் சேகரிக்க முயல்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருப்பது முஸ்லிம் லீக்கை குறிப்பிட்டிருக்கலாம், அவர் பாஜகவை சொல்வதற்கான வாய்ப்பு இல்லை.
திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. பிற மாவட்டங்களிலிருந்து ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு மக்களை கொண்டு வருகிறார்கள். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது, தற்போதும் அதுபோல மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. அதிமுகவும், தமிழ்நாடு அரசும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் திட்டங்களை முன்கூட்டியே ஸ்டாலினுக்கு யாரோ தகவல் கொடுக்கிறார்கள். யாரோ அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும், அறிவிப்புகள் குறித்தும் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
திமுகவினர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள், அவர்கள் விஷயத்தில் அதிமுகவும் அலுவலர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்துள்ளது. எனவே, அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர்.
பெங்களூரிலிருந்து சசிகலா தமிழ்நாட்டிற்கு வந்தபோது மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை பெரிய எழுச்சியாக நான் கருதுகிறேன். இது அவர்களின் கட்சிக்கு பலமுள்ளதாக இருக்கும். இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு இதுபோன்ற வரவேற்பு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்" என்றார். மேலும், அதிமுகவை உடைத்ததும் பாஜகதான், அதிமுகவை ஒருங்கிணைக்க முயல்வதும் பாஜகதான் என்ற கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உங்கள் கருத்து கற்பனையானது என்றார்.
இதையும் படிங்க: ’பழனிசாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடக்காது’: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்